சென்னை (04 மே 2020): சென்னை மாநகராட்சி சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் ரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளது. இதனால் தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள், திருமண மண்டபங்களை பயன்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மொத்தம் 50000 ஆயிரத்தில் முதல் 25000 படுக்கைகளுக்கு அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அடுத்து 25000 அரசுப்பள்ளிகள் பின்னர் தனியார் பள்ளிகள் என படிப்படியாக செல்ல உள்ளோம். அடுத்து சென்னையில் உள்ள கல்யாண மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
சென்னையில் 747 கல்யாண மண்டபங்கள் உள்ளது. அவை அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேசிய பேரிடர் சட்டத்தின்கீழ் அதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். சிகிச்சைக்காக தேவைப்படும் பட்சத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வோம் என சென்னை மாநகராட்சி சார்பில் ரஜினிகாந்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.முன்னதாக தனது திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.