மன்னிப்பு அல்லது பதவி நீக்கம் – அடம்பிடிக்கும் திமுக!

Share this News:

சென்னை (17 ஜன 2020): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைமை கோரியுள்ளதாம்.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.

27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்டட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அறிக்கையின் மூலம் புலம்பித் தள்ளினார்.

இதனால் ஆவேசம் அடைந்த திமுக, சிஏஏவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தைப் புறக்கணித்தது.

போதாதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸ், திமுகவைவிட்டு விலகுவதால் என்ன பிரச்னை. எங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. யாரையும் நாங்கள் வெளியே போ என்று சொல்ல மாட்டோம். ஆனால், தானாக போகிறவர்களைப் பிடித்து வைக்கவும் மாட்டோம்,” என்று அதட்டலாக பேசினார். இது மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் திமுகவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *