அர்ணாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார்!

Share this News:

புதுடெல்லி (05 ஜூன் 2020): ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து ரிபப்ளிக் டிவி, மற்றும் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், விவாதங்களையும் தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகக் ரிபப்ளிக் தொலைக்காட்சி, மற்றும் அதன் ஹோல்டிங் நிறுவனமான ARG Outlier Media Pvt Ltd ஆகியவற்றின் உரிமங்களை ரத்து செய்யவேண்டும் என்று கோரி இந்திய இளைஞர் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றாகப் போராடி வரும் நிலையில் ரிபப்ளிக் டிவி தொடர்ந்து வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக ஐ.ஒய்.சி தலைவர் பி.வி.சீனிவாஸ் கூறினார்

ரிபப்ளிக் டிவி, கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிகளை முழுமையாக மீறுவதாக இளைஞர் காங்கிரஸ் ஊடக பொறுப்பாளர் அம்ரிஷ் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வெறுப்பூட்டும் வகையில் பேசி ரிபப்ளிக் டிவி மற்றும் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டவர்கள் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Share this News: