சென்னை (27 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில் மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில் புதன்கிழமை ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, துபையில் இருந்து திருச்சி வந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், மதுரையில் ஏற்கெனவே கொரோனாவால் உயிரிழந்த நபரின் மனைவிக்கும், மகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.