கோவை (27 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக நாடெங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை காதர் பாய் அவரால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளார்.
கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த காதர், உக்கடம் லாரிபேட்டையில் மீன் கடை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது தனக்கு சொந்தமான 15 வீடுகளையும் கூலி தொழிலாளிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது வீட்டில் தங்கியுள்ள கூலி தொழிலாளிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
அவர்களின் நிலையை உணர்ந்த காதர், இம்மாதம் வாடகை வேண்டாம் எனக் கூறிவிட்டார். ஊரடங்கால் மறைமுகமாக பாதிக்கப்பட்டு தவிக்கும் இவர்களுக்கு தன்னால் முடிந்த சிறு உதவியே என்று காதர் கூறுகிறார்.
காதரின் இந்த கரிசனம் வேலையின்றி வீட்டில் முடங்கியிருக்கும் தங்களுக்கு பேருதவியாக இருக்கும் என வாடகைக்கு குடியிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இம்மாதம் வாடகை செலுத்த வேண்டிய தொகையை வைத்து அடுத்த மாதம் கலக்கமின்றி தங்களது உணவு தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்றும் கூறுகிறார்கள்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு சிலர் கூறுவதாக மத்திய அமைச்சர் வருத்தப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், இங்கு மனிதம் மரணித்துப்
போகவில்லை என்பதை மெய்ப்பிக்கிறார் கோவை காதர் பாய்.