சென்னை (11 ஏப் 2020): சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த சென்னை தம்பதியினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பதை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள கடையில் பணியாற்றிய மூவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து அந்த வளாகத்தில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் பீனிக்ஸ் மால் வணிக வளாகத்திற்கு மார்ச் 10ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை சென்று வந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்
தொடர்ந்து சென்னை பீனிக்ஸ் மாலுக்கு குறிப்பிட்ட கடைக்கு சென்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்று சென்னை மாநாகராட்சி தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை பீனிக்ஸ் மால் சென்ற ஒரு தம்பதியினருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.
ஏற்கானவே கொரோனா இல்லை என்று கூறப்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற அனைவரும் பீதியில் உள்ளனர்.