விழுப்புரம் (16 பிப் 2020): விழுப்புரம் அருகே தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கும், பெட்ரோல் பங்கிற்கும் இடையிலான தொலைவு அதிகம் என்பதால், இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவுப்பணிக்கு சென்ற அவர், புதன்கிழமை காலை வீட்டிற்கு வந்து படுத்துள்ளார்.
சிறிதுநேரத்தில், சக ஊழியரிடமிருந்து போனில் அழைப்பு வந்துள்ளது. ஆதார் அட்டை, போட்டோ எடுத்துக்கொண்டு உடனடியாக ஆபிஸ் வருமாறு நண்பர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மதியம் 1.30 மணியளவில், அவர் ஆபிஸ் புறப்பட்டு சென்றார்.
சிறிதுநேரத்தில், அந்த இளைஞரின் தங்கை தெய்வானைக்கு போன் வருகிறது. சக்திவேலை நாங்கள் பிடித்துவைத்துள்ளதாகவும், புத்தூர் பகுதிக்கு உடனடியாக வருமாறு அதில் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உறவினர் மற்றும் 6 மாத கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு சம்பவ இடத்திற்கு தெய்வானை விரைந்தார். அங்கு சக்திவேலின் முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருந்தன. அவரை சுற்றி 20க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருந்தனர். சகோதரன் இந்த நிலையில் இருப்பதை கண்ட அவர் குழந்தை விழுந்தது கூட தெரியாமல், அழுது புலம்பியுள்ளார். அவர்கள் போலீசிற்கு தகவல் தரவே, 2 மணிநேரம் கழித்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
உறவினர்கள் துணையுடன், தெய்வானை சக்திவேலை வீட்டிற்கு அழைத்து வந்து பணத்தை எடுத்துக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சக்திவேல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் அதோடு நின்றுவிடாமல், அதனை வீடியோவாகவும் எடுத்து பரவ விட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த பகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்தினரே இந்த செயலை செய்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திவரும் நிலையில், மேலும் இதனுடன் தொடர்புடைய சிலரை போலிசார் தேடிவருகின்றனர்.