சென்னை (22 மே 2020): கோட்டையில் தலைமை செயலாளரிடம் நடந்த சந்திப்பு பற்றி சர்ச்சை பேட்டி கொடுத்த தயாநிதி மாறன் சொன்ன ஒரே வார்த்தை பாஜகவுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் காரணம் கிடைத்துள்ளது.
சமூக நீதியையும், சுயமரியாதையையும் வலியுறுத்தும் இயக்கமான தி.மு.க.வின் தலைமை குடும்பத்து உறவினரான தயாநிதி இப்படி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் வெளிப்பட்டது.
கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இது பற்றிய தன் எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்தார். தி.மு.க தலைமை, தயாநிதி பக்கம் முகத்தை திருப்ப, தன்னுடைய கருத்துக்காக வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்தார் தயாநிதி. தாழ்ந்த முறையில் நடத்தினார் என்பதைத்தான் அப்படி சொல்லிவிட்டேன் என்று தயாநிதி வருத்தம் தெரிவித்தார்.
எனினும் பாஜக இதனை விடுவதாக தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக மிகவும் ஆவேசமாக தயாநிதி பேசியதை மறந்திருக்க மாட்டார்கள். அப்போதிருந்தே சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்துள்ளனர்.
இதனையடுத்து ஏற்கனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய பதவியில் இருந்தவரான தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், கட்சியின் சீனியர் லீடர்களிடம் விவாதித்துவிட்டு, கட்சியின் சார்பில் தயாநிதி மீது புகார் கொடுக்கும் மூவ்களை ஆரம்பித்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர்களான நரேந்திரன், ராகவன், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் தயாநிதியை கைது செய்ய வேண்டும் என்று சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழகம் முழுக்க பல ஊர்களிலும் இதுபோன்ற புகார்களை தயாநிதிக்கு எதிராக பா.ஜ.க. கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அதனால், அவர் மீதான புகாரை சீரியஸாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. தலைமை என்று சொல்லப்படுகிறது.