சென்னை (01 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி கொடுத்தார்.
மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் ஏதுமில்லை. பாதுகாப்பு சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குழுவினரும் அதுபற்றி குறை சொல்லவில்லை. பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவே அவர்கள் வாய்மொழியாக கூறிவிட்டு சென்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் தமிழக காவல்துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமானவை. அவ்வப்போது பழைய உபகரணங்கள் மாற்றப்பட்டு, அப்போதுள்ள நவீன வசதிகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகிறது. பழைய பாதுகாப்பு உபகரணங்கள் வழக்கம்போல மாற்றப்படுகின்றன.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக காவல்துறையில் பாதுகாப்பு உபகரணங்கள் 2 மடங்கு அதிகமாகவே உள்ளது. நவீனமானதாகவும் உள்ளன. அதனால் தான் கேரளா மற்றும் அந்தமானில் இருந்து நமது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வாங்கி செல்கிறார்கள். தற்போது கூட அந்தமானுக்கு மோப்பநாயுடன் நமது பாதுகாப்பு குழுவினர் புதிய உபகரணங்களுடன் சென்றுள்ளனர்.
ஆன்-லைன் மூலமாக நமது வங்கி கணக்கில் இருந்து ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பணத்தை எடுத்து மோசடி செய்துவிடுகிறார்கள். இந்த விஷயத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள், வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் தங்களது செல்போன் எண்களை பகிரும்போது கவனமாக இருக்கவேண்டும். உங்களது செல்போனை பயன்படுத்தி, குறிப்பாக வெளிநாடுகளில் இருப்போர்கள் எளிதில் மோசடி செய்துவிடுவார்கள். அவர்களை பிடிக்க முடியாது. ஆனால் இதுபோன்ற சிக்கலில் மாட்டும் நமது கல்லூரி மாணவர்களையோ, பட்டதாரிகளையோ போலீசார் எளிதில் பிடித்துவிடுவார்கள். எந்த வங்கியில் இருந்தும் உங்களது வங்கி கணக்கு எண்ணையோ, ஓ.டி.பி. எண்ணையோ கேட்கமாட்டார்கள். அதுபோல யாராவது கேட்டால் பொதுமக்கள் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் சிறப்பாக வேலை செய்கிறார்கள். ஒரு சிலர் குற்ற செயல்களில் ஈடுபடலாம். வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே குற்ற செயல்களில் ஈடுபடுவது இல்லை. நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பற்றி புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.