சென்னை (27 அக் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு:
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள்
வணக்கம்.
பொருள்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் 43 நாட்களுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பை மதித்து, இந்தச் சட்டமசோதாவிற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பாக.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வி பெறுவதற்கும், பெருமை மிக்க இந்த நாட்டின் எதிர்கால மருத்துவர்களாக வருவதற்கான கனவை நனவாவதற்கும், தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருவதை, மாண்புமிகு உள்துறை அமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.
மறுபுறம், 2017 – 2018 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை ஆராய்வதற்காக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கலையரசன் உள்ளிட்ட மூத்த வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளைத் தொடர்ந்து “மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கான தகுதித்தேர்வாகக் கருதப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது” என்று மாநில அரசு முடிவெடுத்தது, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான நியாயமான செயலாகும்.
மேற்கண்ட முடிவின் அடிப்படையில், நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான “மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020”, 15.09.2020 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
16.10.2020 அன்று நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், எனது தலைவரும் தி.மு.க தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டின் பலனை அடையும்படியாக மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு 21.10.2020 அன்று கடிதம் எழுதினார். ஆனால், வியப்பளிக்கும் வகையில், ஆளுநர் அவர்கள் எழுதிய 22.10.2020 தேதியிட்ட கடிதத்தில், ஏற்கனவே 40 நாட்கள் அந்த முக்கியமான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத அவர், அதுகுறித்து முடிவெடுக்க மேலும் மூன்றிலிருந்து நான்கு வாரகால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக இருப்பதால் தி.மு.க அமைதியாகவும் ஜனநாயகவழியிலும் அக்டோபர் 24, 2020 அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியது. அப்போது, எனது தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மேலும் காலதாமதமின்றி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநர் அவர்களை வலியுறுத்தினார். ஏற்கனவே நீட் தேர்வு உண்டாக்கியிருக்கும் காயத்தோடு, தற்போது மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது மருத்துவக் கல்வியைக் கற்க விரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதோடு, இந்தக் கல்வியாண்டைப் பொறுத்தவரையில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகிவிடும்.
மேற்சொன்ன காரணத்தினாலும், எனது தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மருத்துவத்துறையை தங்கள் தொழிலாக அமைத்துக் கொள்ளும் அரசுப்பள்ளி மாணவர்களின் கனவினை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றும்படியாக “மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020”-க்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.