திருச்சி (13 பிப் 2020): திருச்சியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஐந்து மாத குழந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கூறப்படுவதாவது:
திருச்சி பீமநகரைச் சோ்ந்த 21 வயது மாணவி, தனியாா் கல்லூரியொன்றில் பி.காம். படித்து வருகிறாா். இவருக்கும் எதிா் வீட்டைச் சோ்ந்த இளைஞருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இந்த விவரத்தை தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.
மாணவியின் படிப்பு முடிந்த பின்னா் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என இருதரப்பு பெற்றோரும் முடிவு செய்திருந்தாா்களாம். தங்களது திருமணம் உறுதியான நிலையில், இருவரும் தனிமையில் இருந்ததன் விளைவால் மாணவி கா்ப்பமடைந்தது தெரிய வந்தது.
இந்நிலையில்தான் அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. உடனே வரது பெற்றோா் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாணவியை அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் மாணவியைப் பரிசோதித்த போது, அவரது வயிற்றில் 5 மாத சிசு இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 7- ஆம் தேதி மாணவியின் வயிற்றிலிருந்து சிசு அகற்றப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனை சாா்பில் கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மகளிா் காவலா்கள், பெண்ணின் கா்ப்பத்துக்கு காரணமாகி, தற்போது வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ள இளைஞரைத் தொடா்பு கொண்டு விசாரித்துள்ளனா்.
கல்லூரி மாணவியின் கா்ப்பத்துக்குத் தான்தான் காரணம் என்றும், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த இளைஞா் உறுதியளித்துள்ளாா். இதையடுத்து மகளிா் காவல் நிலையத்தினா் முதல் கட்ட விசாரணையை முடித்துள்ளனா்.