சென்னை (16 ஜன 2020): இவ்வருடம் பெரியார் விருது இதுவரை அறிவிக்காதது காரணம் ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் உடனே பெரியார் விருதை அறிவித்துள்ளது தமிழக அரசு.
தந்தை பெரியார் விருது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (புதன்கிழமை) மாலை சமூக வலைதலங்களில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது 2019, யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரியார் விருதுடன் ரூ. 1. லட்சம் ரொக்கமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.