சென்னை (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கை கழுவ அதிக தண்ணீர் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி அனைவரும் அடிக்கடி சோப் அல்லது கைகழுவும் திரவம் போட்டு கைகளை கழுவ வேண்டும். அடுத்தவருடன் கைகுலுக்க வேண்டாம். நோய் பாதிப்புள்ளவர்களிடம் நெருங்கிப்பழக வேண்டாம். தேவைப்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்.
இவர்களின் அன்றாட உபயோகத்துக்கு தினமும் ஆயிரத்து 350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் தினமும் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது. எனவே, கொரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் சென்னையில் இடைவிடாமல் தண்ணீர் வினியோகம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கும் போதுமான அளவுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை. அவர்கள் கைகழுவ பள்ளிகளில் தண்ணீருடன் சோப் அல்லது கைகழுவும் திரவம் இலவசமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.