புதுடெல்லி (16 பிப் 2020): ஜம்மு காஷ்மீரில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷா பைசல். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆ,ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து 2019 மார்ச் 16-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அப்பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது பா.ஜ.க அரசு. இந்த நடவடிக்கையின்போது பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களைப் போன்றே, ஷா பைசலை, ஆகஸ்ட் 13-ம் தேதி பைசலை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்த போலிஸார் அவரை ஸ்ரீநகர் எம்.எல்.ஏக்கள் விடுதியில் வீட்டுக்காவலில் அடைத்தனர்.
இந்நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஷா பைசல் மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசலும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷா ஃபைசல், 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.