சென்னை (06 பிப் 2020): விஜய்யின் வீடு, ஏஜிஎஸ் குழும சொத்துக்களில் ரெய்டு நடந்து வருவது குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிகில் விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், விஜய்யின் வீடுகள், பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர், பிரபல நடிகர், அவரின் வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகியோரின் இடங்களில் 5.02.2020 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அண்மையில் வெளியாகி ரூ. 300 கோடி வசூல் செய்த படம் தொடர்பாகத் தான் இந்த சோதனை நடந்தது.
சென்னை மற்றும் மதுரையில் மொத்தம் 38 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பைனான்சியருக்கு சொந்தமான இடங்கள், ரகசிய இடங்களில் இருந்து ரூ. 77 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்து ஆவணங்கள், செக்குகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையின்போது கிடைத்தவற்றை வைத்து பார்க்கும்போது இந்த வழக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது ரூ. 300 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சோதனை செய்யப்பட்ட வினியோகஸ்தர் ஒரு பில்டரும் கூட. வினியோகஸ்தருக்கு சொந்தமான ஒரிஜினல் ஆவணங்கள் ரகசிய இடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அது அவரின் நண்பரின் வீடு ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சோதிக்கும் பணி நடந்து வருகிறது. சோதனை செய்யப்பட்ட தயாரிப்பாளர் படம் தயாரிப்பு, வினியோகிப்பு, மல்டிபிளக்ஸ்களில் படம் திரையிடல் மற்றும் பல படங்களை தயாரித்தவர். அவரின் அலுவலக வளாகங்களில் இருக்கும் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்தது, செலவுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
பிரபல நடிகரை பொறுத்தவரை அசையா சொத்துக்களில் செய்துள்ள முதலீடுகள், சோதனைக்கு ஆளாகியுள்ள தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க வாங்கிய பணம் குறித்து தான் சோதனை நடந்து வருகிறது. சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.