சென்னை (22 ஜன 2020): ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏ.ரங்கநாதன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலா், உத்தண்டி, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு பங்களாக்களைக் கட்ட அனுமதி அளிக்க கோரி வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு விசாரணையின் போது உத்தண்டி, சோழிங்கநல்லூா், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் நடிகா் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்குப் புறம்பாக சொகுசு பங்களாக்களைக் கட்டியுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விதிமீறல் பங்களாக்களைக் கட்டிய உரிமையாளா்களின் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும், அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைச் சுட்டிக்காட்டி அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏவுக்கு ஏற்கெனவே உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இதுதொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் முட்டுக்காடு படகு குழாம் பகுதியில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், கட்டுமானங்களைக் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் 5 சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு பங்களாக்களை அப்புறப்படுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கேரள மாநிலத்தில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அண்மையில் இடிக்கப்பட்டன. எனவே முட்டுக்காடு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 5 சொகுசு பங்களாக்களில் ஒன்றை முழுவதுமாக இடிக்கவும், 5 சொகுசு பங்களாக்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீா், கழிவுநீா் மற்றும் மின் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.