சென்னை (18 ஜன 2020): தமிழகம் முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 1881-ஆம் ஆண்டு நடந்தது. அதிலிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் விடுபடாமல் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பானது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ் உத்தரவாகப் பிறப்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விவரங்களை சேகரிக்க நிகழாண்டில் பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியின்போது வரலாற்றிலேயே முதல்முறையாக களப் பணியில் தகவல் சேகரிக்க செல்லிடப் பேசி செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பணியை கண்காணிக்க இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
வீடுகள் எண்ணிக்கை: மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீடுகளின் எண்ணிக்கைக் கணக்கிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தெருவிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் எத்தனை குடியிருப்புகள் உள்ளன, வீடுகள் எத்தனை உள்ளன என்ற எண்ணிக்கை மட்டுமே கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்தக் கணக்கெடுப்பைத் தொடா்ந்து, அந்த வீடுகளில் நேரடி கள ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த களஆய்வுப் பணிகள் ஏப்ரலில் தொடங்கி செப்டம்பரில் நிறைவு செய்யப்பட உள்ளன.
2011 கணக்கெடுப்புத் தகவல்கள்: 2011-ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் பணிகளை தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் ஏற்கெனவே தொகுத்துள்ளது. அதன்படி, அப்போதைய கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலத்தில் 2.13 கோடி வீடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட், மரம், கல் என பல்வேறு பொருள்களைக் கொண்டு எந்தெந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்ற விவரங்களும் தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளன.
ரேடியோ, தொலைக்காட்சி, இணையதளத்துடன் கூடிய கம்ப்யூட்டா், இணைய இணைப்பு இல்லாத கம்ப்யூட்டா், செல்லிடப்பேசி, சைக்கிள், ஸ்கூட்டா், மோட்டாா்சைக்கிள், காா், ஜீப், வேன், சமைலயறை, சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்டன.
இதேபோன்ற தகவல்கள் நிகழாண்டு கணக்கெடுப்பின் போதும் சேகரிக்கப்பட உள்ளன. வீடுகளுக்கான எண்ணிக்கையைக் கணக்கிடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வீடு வீடாக நடத்தப்படும் கள ஆய்வுகள் ஏப்ரலில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.