சென்னை (27 மார்ச் 2020): தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார் கேரள மாணவி ஹிபா ஷமார்.
சென்னை மருத்துவமனையில் தண்டு உயிரணுக்கள் (Stem Cells) பற்றாக்குறையால் உயிருக்கு போராடி வரும் நோயாளி ஒருவருக்கு கேரளாவை சேர்ந்த 18 வயது மாணவி ஹிபா என்பவர் தனது தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார்.
ஹிபா கேரள மாநிலம் எர்ணாகுளம் தெரஸா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். ஷமார், ஜீனத் தம்பதிகளின் மகளான ஹிபா, ஐந்து மாதங்களுக்கு முன்பு Stem Cells தானமாக வழங்குவதற்கு பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் ஒரு நோயாளி Stem Cells பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஹிபா உடனடியாக அந்த நோயாளிக்கு Stem Cells தானமாக கொடுக்க முன்வந்தார்.
இதற்காக கொச்சி அமிர்தா மருத்துவமனையில் ஹிபாவின் Stem Cells எடுக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு செலுத்தப்படும். இதற்கு 13 மணி நேர பயணம் தேவைப்படும் என்பதாலும், போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் இருக்க போலீசாரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
கொரோனா பீதியில் ஒட்டு மொத்த உலகமும் இருக்க, குறிப்பாக கேரளாவில் 100க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனைக் குறித்து அச்சப்படாமல் நோயாளிக்கு உதவ முன்வந்துள்ள மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்தியாவில் மிக இளவயதில் தண்டு உயிரணுக்களை தானமாக வழங்குபவர் ஹிபா என்பது குறிப்பிடத்தக்கது.