ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து வெளியிட தயாரா? – ஜவாஹிருல்லா சவால்!

Share this News:

சென்னை (06 பிப் 2020): நடிகர் ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து சான்றிதழ் தர தயாரா? என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார்.

மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது முக்கியமான ஒன்று எனவும், அது இருந்தால்தான் உள்நாட்டவர் யார் வெளிநாட்டவர் யார் என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ரஜினிக்கு சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ரஜினி சொல்வது முற்றிலும் தவறு. CAA, NRC, NRP அனைத்தையும் ஒன்றாக தான் பார்க்க வேண்டும். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடக்கக்கூடிய போராட்டத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள் எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்கவில்லை. மாணவர்களின் கடுமையான எதிர்ப்பை தணிப்பதற்காக பாஜகவின் முகவராக இருக்கக்கூடிய ரஜினிகாந்த்தை மத்திய அரசு பயன்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு ஆலோசனை செய்யும் அளவிற்கு ரஜினிகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை. மாணவர்கள் சிகரெட் குடிக்க கூடியவர்களாகவும் மது அருந்தக் கூடியவராகவும் மாறுவதற்கு ரஜினியின் திரைப்படங்களே காரணம். NPR என்பது அபாயகரமானது ஒரு தனிநபரின் சொந்த விவரங்களை NRP மூலம் சேகரித்து வாக்காளர் பட்டியல் போல வெளிப்படுத்தும் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவரும் இந்த சட்டத்தால் ராணுவத்தில் பணியாற்றிய சனா உல்லா, இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமது அவர்களின் குடும்பத்தினர், இந்தியாவின் முதல் பெண் முதல்வராக இருந்த அன்வரா தாஹி அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கப்போவதில்லை. அவர்களுக்காக குரல் கொடுக்க ரஜினி தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அசாமில் பல இலட்சம் இஸ்லாமியர்களை குடியுரிமை இல்லாதவர்களாக மாற்றக் கூடிய நிலைக்கு ரஜினி பதில் கொடுப்பாரா என்றும் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார்.தேவையில்லாமல் மதகுருக்கள் பற்றி பேசும் ரஜினியின் வாயடைக்க வேண்டும். பாஜகவிற்காக ரஜினி இந்தளவிற்கு தரம் தாழ்ந்து பேசுவது மோசமான ஒன்று. எனவே ரஜினிகாந்திற்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன், ரஜினிகாந்தின் பெற்றோர் பிறப்பிடம் எது அதற்கான சான்றிதழை ரஜினி வெளியிடுவாரா எனவும் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.


Share this News:

Leave a Reply