சென்னை (05 நவ 2022): ஒபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் எல்லாம் திமுகவின் ஆதரவில்தான் நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இதற்கு முன் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். இதன் பின் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்றார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவை தான் குற்றம் சொல்லுகிறது.
அதேபோல ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டார். அதனால் தர்மயுத்தம் 2.0 என்பது ஒரு கர்ம யுத்தம். கட்சியைக் காட்டிக்கொடுத்து ஆட்சி இருக்கக்கூடாது என்று அதிமுகவிற்கு எதிராக ஓட்டு போட்டீர்கள். எம்ஜிஆர் மாளிகையினை காலால் எட்டி உதைத்து கோப்புகளை எல்லாம் எடுத்துச் சென்றீர்கள். இதெல்லாம் யாருடன் சேர்ந்து கொண்டு செய்தீர்கள். திமுகவுடன் சேர்ந்து கொண்டு தானே செய்தீர்கள். திமுக ஆதரவு இல்லாமல் இந்த விஷயங்கள் எல்லாம் நடக்குமா? நாங்கள் 62 பேர் சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவராக உதயகுமாரைச் சொல்லும் போது அதை சபாநாயகர் ஏற்கவேண்டும். ஆனால் மரபுகளைத் தூக்கி வீசிவிட்டு, இது குறித்து முடிவுகளை எடுக்காமல் இருப்பதென்பது எந்த விதத்தில் நியாயம். ஸ்டாலினின் முழு ஆதரவோடு திமுக இதற்கு பக்க பலமாக செயல்படுகிறது” எனக் கூறினார்.