சென்னை (23 பிப் 2020): மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு ஜே.என்.யு மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அனைவருக்குமான கல்வியை உறுதி படுத்த வேண்டும், கல்வியை தனியார்மயமாக்கக் கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கு பெற்ற ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, கல்வி என்பது வியாபாரப் பண்டமல்ல அனைவரின் உரிமை என்றார்.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஐஷி கோஷ், “மாணவர்களான நாங்கள், பிரிட்டிஷார்கள் என்ன செய்தார்களோ அது மீண்டும் நிகழ நாங்கள் விரும்பவில்லை என்பதையே. எதிர்கால நலன்களுக்காக அரசியலுக்கு வருகிறோம்.
அரசியலமைப்பு மற்றும் கல்வியைக் காப்பாற்றும் பொறுப்பு மாணவர்களுக்கும் இருக்கிறது . அரசியலமைப்பு மற்றும் கல்வியை அம்பேத்கர் பகத்சிங் வழியில் நின்று பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களுக்கு உண்டு. அம்பேத்கர், பகத்சிங் குழந்தைகள் நாங்கள், தேசப்பற்றை நாங்கள் சாவர்க்கர், கோல்வால்க்கர் குழந்தைகளிடம் கற்க மாட்டோம்” என்றார் ஐஷி கோஷ்