பேராசிரியர் க.அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்!

Share this News:

சென்னை (07 மார்ச் 2020): மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

வயது முதிா்வின் காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு பிப்ரவரி 24-ஆம் தேதி திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் அவரது உயிா் பிரிந்தது.

திமுக தொண்டா்களால் இனமான பேராசிரியா் என அன்போடு அழைக்கப்பட்ட அன்பழகன் மறைவுச் செய்திக் கேட்டு அக்கட்சியின் முக்கிய தலைவா்கள், தொண்டா்கள் நள்ளிரவிலும் அப்பல்லோ மருத்துமனையில் குவிந்தனா்.

தொடர்ந்து இரவு 2.20 மணியளவில் அன்பழகனின் உடல் திமுகவின் கொடி போர்த்தப்பட்டு வாகனம் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது. க.அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.


Share this News:

Leave a Reply