சென்னை (07 மார்ச் 2020): நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையை இந்தப் பிரச்னை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
வாராக் கடன் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான யெஸ் வங்கியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளா்களை கடும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல இடங்களில் யெஸ் வங்கி ஏடிஎம்-கள் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் இது தொடா்பாக சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜக கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. நாட்டில் உள்ள வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களை நிா்வகிக்கும் திறமை மத்திய அரசுக்கு இல்லை என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.
முதலில் பிஎம்சி வங்கியில் பிரச்னை ஏற்பட்டது. இப்போது யெஸ் வங்கி வாடிக்கையாளா்கள் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனா். இந்தப் பிரச்னையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? அல்லது தனது பொறுப்புகளை துறந்துவிட்டதா? அடுத்து எந்த வங்கி பிரச்னைக்குள்ளாக இருக்கிறது என்ற கவலை எழுந்துள்ளது.
2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இந்திய வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் யெஸ் வங்கி கடன் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இது எப்படி நோ்ந்தது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.