சென்னை (18 டிச 2019): குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் டெல்லி ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலையும் மாணவர்கள் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்திக்க, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சந்திக்க சென்றார். ஆனால் அவரை மாணவர்கள் சந்திக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து வெளியில் இருந்தவாறு உள்ளே இருந்த மாணவர்களுடன் பேசிய கமல்ஹாசன், இப்போராட்டத்திற்கு முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “எனது நாடு, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகையால் நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு பல்கலைக் கழகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
நான் இறக்கும்வரை, என்னை ஒரு மாணவன் என்றுதான் அழைத்துக் கொள்வேன். மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன்.
மத்திய அரசு, மாணவர்களை படிக்கும் இடத்திலேயே அகதியாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம்! குடியுரிமைச் சட்ட திருத்தத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.