புது டெல்லி (14 அக் 2020): டெல்லியில், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி மன்சூக் மாண்டவியாவை தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் கனிமொழி எம்.பி. அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையம் அமைக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். துறைமுகத்துக்கு சொந்தமான நிலங்களில் காற்றாலை, உணவு தானியங்களுக்கான கிடங்குகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
துறைமுகம் தொடர்பான இந்த திட்டங்கள் தவிர்த்து, கடல் அரிப்பு இருக்கும் பகுதிகளான மணப்பாடு போன்ற இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் மீன்பிடி இறங்குதளங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.