காயல்பட்டினம் (20 ஜன 2020): காயல்பட்டினம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வங்கியில் உள்ள பணத்தை திரும்பப் பெற்று வங்கிக் கணக்கை பொதுமக்கள் முடித்துக் கொள்வதாக தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வங்கியின் பேங்க் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவை புறக்கணிப்போம் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் பகுதியில் உள்ள மக்கள் தேசிய மக்கள் வங்கியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்காக வங்கியில் குவிந்தனர். உடனே பதறி அடித்துக் கொண்டு வங்கி நிர்வாகம் சார்பில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும், தேசிய மக்கள் பதிவேடு தான் கட்டாயமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கை முடித்துக் கொள்வதாக காயல்பட்டினம் மக்கள் அறிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.