சென்னை (20 ஜன 2020): “பரட்டை பற்ற வைத்தது தமிழகம் எங்கும் பற்றி எரிகிறது!” என்று நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக பெரியார் குறித்து அவர் பேசியதற்கு “ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனவும் சில கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் சர்ச்சைக் கருத்தை பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்!” என்றார்.
மேலும், “பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. மாநில அரசின் அனுமதியின்றி எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரமுடியாது!” இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.