சென்னை (28 ஜன 2020): குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர் கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் ரகசிய அறையில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் முறைகேட்டில் முக்கிய நபராக இருந்து வரும் ஜெயக்குமார் என்பவரை பிடிப்பதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையேகுரூப் 4 தேர்வு முறைகேடு தொடர் கைது ஆகியவற்றால் தேர்வு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.