வேலூர் (08 பிப் 2020): வேலூர் அருகே கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கொசப்பேட்டை திருப்பூர் குமரன் தெருவில் வசித்து வந்தவர் கட்டிட மேஸ்திரி குட்டி (எ) குமரவேல்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில்க்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளனர்.
பிப்ரவரி 7 ந்தேதி இரவு 8 மணியளவில், கோவில் வாசல் முன்பு குமரவேலை, மர்ம நபர்களால் சிலர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். வெட்டு வாங்கியவர் இறந்தார் என தெரிந்தபின்பு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
மக்கள் நடமாட்டமுள்ள கோவிலின் வாசலிலேயே கொலை நடந்ததை பார்த்து கோயிலுக்கு வந்தவர்களும், அங்கிருந்த கடைக்காரர்களும் அதிர்ச்சியாகி அங்கிருந்து ஓடியுள்ளனர். கொலை தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதுக்குறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் சம்பவயிடத்துக்கு வந்து குமரவேலின் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குபதிவு செய்து இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், யாரால் வெட்டிக்கொல்லப்பட்டார், வெட்டியது சம்மந்தப்பட்ட நபர்களா அல்லது கூலிப்படையா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. தப்பியோடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.