சென்னை (15 ஜன 2020): துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி.
பத்திரிகையாளர், சோ.ராமசாமி தொடங்கிய துக்ளக் இதழ் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டனர்.
விழாவில், துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு இதழை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய ரஜினி, ஆந்திராவில் பாஜகவை கட்டியெழுப்புவதற்கு வெங்கையா நாயுடுவின் பங்களிப்பு பற்றியும் அவர் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கான உழைப்பு பற்றியும் கூறி அவரை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், துக்ளக் பத்திரிகை சோ ராமசாமி இல்லாமல் 2 வாரங்கள்கூட நடக்காது என்ற நிலையில் குருமூர்த்தி ஆசிரியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நடத்தி வருகிறார் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமரும், துணை குடியரசுத் தலைவரும் பேசுகிறார்கள் என்றால் அவர்கள் சோ மீது வைத்துள்ள மரியாதை. சோ துக்ளக் ஒரு வாசக பட்டாளத்தை மட்டுமல்ல ஒரு துக்ளக் என்கிற ஒரு இனத்தையே உருவாக்கினார்.
முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுககாரர் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அவர்களை அறிவாளி என்று சொல்லிவிடலாம். என்றார்.
இதில் என்ன வேடிக்கை என்றால், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்ற வார்த்தையை வைத்து ரஜினியை நெட்டிசன்கள் தாளித்துக் கொண்டு உள்ளனர்.