தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? – தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை!

Share this News:

சென்னை (16 மார்ச் 2021): தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே இருந்தநிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும், செங்கல்பட்டில் 81 பேரும், கோவையில் 70 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 38 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 165 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளார். அந்தவகையில் சென்னை, கோவை, மதுரை, நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 12 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 553 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் காணொளியில் மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் இந்த அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *