தில்லி (02செப். 2020):சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சீனாவுக்கான பொருளாதார ரீதியிலான பதிலடியாக இதனைக் கூறிவரும் மத்திய அரசு தற்போது, மேலும் 118 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில், லுடோ வேர்ல்ட், வீசாட், பப்ஜி உள்ளிட்ட செயலிகளும் அடங்கியுள்ளன. இந்தியாவில் 18 கோடி பேர் பப்ஜி விளையாட்டைப் பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், இந்த விளையாட்டுக்கு அடிமையாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து வயதினரும் இந்த விளையாட்டில் தீவிரம் காட்டினாலும் வளரிளம் பருவத்தினர் (Teenage) காட்டும் தீவிரம் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் அச்சத்துக்குள்ளாக்குகிறது. அதேபோல், டீன் ஏஜ் பிள்ளைகள் இந்த விளையாட்டில் முழு தீவிரமாய் இறங்குவதால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
PUB-G-இன் பயங்கர முகம்தான் என்ன.., என்பதை பார்ப்போமா..?
சுயத்தை மறக்கும் பப்ஜி பிரியர்கள்: தங்களது பிரிய நண்பர்களை இணையவழியில் சந்தித்து விளையாட்டை துவங்கும் பப்ஜி பிரியர்கள், நாளடைவில் அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நாள் முழுவதும் போனிலேயே மூழ்கி தங்களின் மனம் மற்றும் உடல் நலன்களை கெடுத்துக் கொள்கின்றனர்.
இதேபோல் பப்ஜியை பயன்படுத்தும் பலரும் இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கக் கிறக்கம், தலைவலி, எதற்கெடுத்தாலும் எரிச்சல், கண் கோளாறுகள், மன அழுத்தம், உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். மேலும் அதிமுக்கிய பயங்கரமாக தற்கொலை எண்ணம், இதய படபடப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இவர்கள் தமது உயிரையே காவு கொடுப்பது உச்சகட்ட பயங்கரமான விளைவாக நிற்கின்றது. இப்படி சுயத்தை மறந்து விளையாடும் பிரியர்கள், தங்களின் எதிர்காலத்தை இழந்து வருவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அனைத்துக்கும் மேலாக குடும்ப உறவுமுறைகளில் ஒரு பெரும் பின்னடைவையும் சிக்கல் சீரழிவுகளையும் ஏற்படுத்துவதாக பெற்றோர் பெரும் கவலைக்குள்ளாகின்றனர்.
இன்றைய சமுதாயத்தில் வெற்றிகள் தற்போது எளிமையாக கிடைப்பதில்லை. நிஜ வாழ்க்கையில் கிடைக்காத வெற்றிகளை இந்த செயற்கை ஆப் விளையாட்டுகளின் மூலம் வளரிளம் பருவத்தினர் தீர்த்துக் கொள்கின்றனர். இதனால் நனவின் உன்னதம் பிடிபடாமல் போகின்றது.
தடை மூலம் பெற்றோருக்கு பெரும் நிம்மதி கிடைத்திருப்பதாகவே கூறலாம்.