எனக்கு பதவி வேண்டாம் ஆனால் கட்சி வேண்டும் – மீண்டும் குழப்பிய ரஜினி!

Share this News:

சென்னை (12 மார்ச் 2020): முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை, ஆனால் கட்சியை தொடங்கி அதன் மூலம் ஒருவரை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக அவரது ரஜினி ரசிகர் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. சுமார் 1 கோடி தொண்டர்களை இலக்கு வைத்து உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்தது.

இதற்கிடையே அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி புதிய கட்சி தொடங்காமல் இருப்பது அவரது ரசிகர்களிடமும், தொண்டர்களிடமும் சற்று சோர்வை ஏற்படுத்தியது. ரஜினி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தியதால் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அவர் தனது கட்சி மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

புதிய கட்சி தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியானதால் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி தெளிவாக மக்களுக்கு அறிவிக்க ரஜினி முடிவு செய்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சரியாக 10.05 மணிக்கு வீட்டுக்கு வெளியே வந்தார். அங்கு குழுமியிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

ரசிகர்கள் உற்சாக மிகுதியில் சத்தம் எழுப்பினார்கள். வீட்டில் இருந்து புறப்பட்ட ரஜினியின் கார் மீது ரசிகர்கள் மலர் தூவினார்கள்.

ரஜினியின் காருக்கு பின்னால் நிர்வாகிகளும் ரசிகர்களும் ஊர்வலமாக சென்றனர். சரியாக 10.35 மணிக்கு நட்சத்திர ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. ரஜினி தனது திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

‘என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வந்துள்ள பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களுக்கே இந்தச் சந்திப்பு எதற்கு என்பது தெரியும். கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து ஒரு விசயத்தில் எனக்கு அதிருப்தி, தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என்று கூறினேன். அது பல ஊகங்களை உண்டாக்கியது.

பத்திரிகை, ஊடகங்களில் பல்வேறு வி‌ஷயங்கள் வெளியாகின. ஆனால் என்னுடைய மாவட்ட செயலாளர்களிடம் இருந்து எதுவுமே வெளியாகவில்லை. அதற்கு முதலில் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சந்திப்பு. அத்துடன் என்னுடைய வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு கண்ணோட்டமாகத் தான் இந்தச் சந்திப்பு. நான் கட்சி தொடங்குவதற்கு முன்பே இதை சொல்லிவிட்டால் எல்லோருக்கும் ஒரு தெளிவு வரும். எனக்கும் இதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

1996 இலிருந்து 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருவதாக சொல்லி வருகிறேன் என்று எழுதுகிறார்கள். ஆனால் நான் அரசியல் அறிவிப்பை வெளியிட்டது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ந்தேதி தான். நான் அதற்கு முன்பு அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது கிடையாது. அரசியல் வருகை குறித்து கேட்டால் கூட அது ஆண்டவன் கையில் என்றுதான் சொல்லிவந்தேன். எனவே இனிமேல் அந்த வரிகளை எழுதவேண்டாம். 1996 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக என்னுடைய பெயர் அரசியலில் இழுக்கப்பட்டது. நான் மிகவும் போற்றும் பெரியவர் கலைஞர் அவர்கள், மூப்பனார் அவர்களுக்காக குரல் கொடுத்தேன். சோ அவர்களுடன் பேசி பழகும்போது ஒருவேளை நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் எப்படிப்பட்ட அரசியலாக இருக்கும் என்று யோசித்து வந்தேன்.

அதன் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு இங்கே அரசியலில், ஆட்சியில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டது. எந்தச் சூழ்நிலையிலும் ஆட்சி கவிழலாம் என்ற நிலை இருந்தபோது என்னை வாழவைத்த தெய்வங்களுக்காக அரசியலுக்கு வருகிறேன் என்று முதன்முதலாக அறிவித்தேன். அப்போதே சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கிறது. அதை சரி செய்யவேண்டும். மக்கள் மனதில் முதலில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்று கூறினேன். சிஸ்டத்தை சரி செய்யாமல், மக்கள் மனதை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் அது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைத்தது போல் தான் இருக்கும்.

அதற்காக முதலில் அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு நான் முக்கியமாக 3 திட்டங்கள் வைத்திருந்தேன். முதலில் நான் கவனித்ததில் இங்கே 2 பெரிய கட்சிகள் தி.மு.க., அதிமுக. அந்த கட்சிகளில் பல்வேறு நிர்வாகிகள் இருக்கிறார்கள். அந்த கட்சியில் நான் கவனித்த வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி பதவிகள் இருக்கின்றன. அவை தேர்தல் நேரத்தில் தேவை. அவற்றின் மூலம் வாக்குகள் கிடைக்கும். தேர்தல் நேரத்தில் அவர்களின் பணி தேவை. தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் தேவையில்லை. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் ஆளுங்கட்சி ஆட்கள் என்று எல்லாவகையிலும் ஊழல், முறைகேடுகள் நடக்கும். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் பணமும் செல்லாமல் தடுக்கிறார்கள். அது மக்கள், கட்சி, ஆட்சி மூன்றுக்குமே கெட்டது.

சிலர் கட்சிப் பதவியையே தொழிலாக வைத்துள்ளார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நேரத்திற்கு எவ்வளவு பதவிகள் தேவையோ அவை உருவாக்கப்பட்டு பின்னர் தேர்தல் முடிந்த பிறகு கட்சியை நடத்துவதற்கு அத்தியாவசியப் பதவிகள் எத்தனை தேவையோ அத்தனையை மட்டும் வைத்துக்கொண்டு மீதி பதவிகளை கலைத்துவிட வேண்டும். வீட்டில் விசே‌சங்கள் செய்யும்போது நமக்கு வேலையாட்கள் தேவை. பண்டிகை, விசே‌சம் முடிந்த பின்னர் அவர்கள் தேவையில்லை. விசே‌சம் முடிந்த பிறகும் அவர்களை வீட்டிலேயேவா வைத்துக்கொள்கிறோம். அனுப்பி விடுகிறோம் அல்லவா… அது போலத் தான். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பேரை மட்டுமே பதவிகளில் வைத்துக்கொள்ள போகிறோம்.

இரண்டாவது சட்டமன்றத்தை எடுத்துக்கொண்டால் எல்லோருமே 55 வயதுக்கு மேற்பட்டோர் தான் இருக்கிறார்கள். 50 வயதுக்குட்பட்டோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே புதியவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வருவதே இல்லை. சாக்கடை என்று ஒதுங்கிவிடுகிறார்கள். அவர்கள் எளிதாக கட்சிக்குள் நுழைந்து பதவிகளுக்கு வர முடியாது. அப்படி பதவிக்கு வரவேண்டும் என்றால் அவர்கள் வாரிசுகளாக இருக்கவேண்டும். ஆனால் எனது கட்சியில் 60-65 சதவீதம் பேர் இளைஞர்களாகவும் புதியவர்களாகவும் இருப்பார்கள். ஓரளவுக்கு படித்தவர்களாகவும் அவர்களது பகுதிகளில் நல்லவர் என்று பெயர் எடுத்தவர்கள், மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களை தேர்ந்தெடுப்போம். மீதம் இருக்கும் 30-35 சதவீதம் பிற கட்சிகளில் இருக்கும் நல்லவர்களை சேர்த்துக்கொள்வேன். மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்ற நேர்மையான அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் ஆபிசர்கள் போன்றவர்களையும் கட்சிக்கு நானே நேரடியாக சென்று அழைப்பு விடுத்து சேர்ப்பேன். இப்படி ஒரு புது சக்தி சட்டமன்றத்துக்குள் சென்று ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கும். அதற்கு ரஜினி ஒரு பாலமாக இருப்பேன். இத்தனை ஆண்டுகளில் நான் சம்பாதித்த புகழ், அன்பு, நம்பிக்கை இவை இதற்கு உதவும் என்று நம்புகிறேன்.

மூன்றாவது… இந்தியாவில் தேசிய கட்சிகளை தவிர எல்லா மாநில கட்சிகளிலுமே ஆட்சி, கட்சி இரண்டுக்குமே ஒருவரே தலைவராக இருக்கிறார். இதனால் தேர்தலில் ஜெயித்து பதவிக்கு வந்த பிறகு அவர்களிடம் மக்கள் கேள்வி கேட்க முடியாது. கட்சியில் இருப்பவர்கள் ஆட்சி பற்றி கேள்வி கேட்டால் தூக்கிவிடுவார்கள். எனவே என்னுடைய ஆட்சியில் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. கொள்கைகள் தான் கட்சி. மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளுக்காக தான் ஓட்டு வாங்குகிறோம். எனவே அதை நிறைவேற்ற நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்து செயல்படுத்தப்படும். கட்சி தலைவரே அதற்கு தலைவராக இருப்பார். அதை செயல்படுத்துதலே ஆட்சியில் இருப்பவர் கடமை.

நான் கட்சி தலைவராக இருப்பேனா… இல்லை ஆட்சிக்கு தலைவனாக இருப்பேனா என்றால் என்னால் முதல் அமைச்சர் பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. 1996 லேயே பல்வேறு தலைவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். ஆனால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதல்வராகும் மனநிலையே என்னிடம் இல்லை.

2 பெரிய கட்சிகள் அசுர பலத்துடன் இருக்கிறது. ஒரு கட்சி பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லை. அங்கு வாரிசு என்பதை நிரூபிக்க கட்டாயம் இருக்கிறது. அது வாழ்வா? சாவா? போன்ற நிலையாக இருக்கிறது.

மற்றொரு கட்சி ஆட்சியில் இருக்கிறது. அவர்களிடம் குபேரனின் கஜானா இருக்கிறது. மொத்த கட்டமைப்பையும் வைத்து இருக்கிறார்கள்.

இந்த 2 பெரிய ஜாம்பவான் கட்சிகளுடன் நாம் மோத வேண்டி இருக்கும். சினிமாவில் கிடைத்த புகழையும், ரசிகர்களையும் வைத்து இந்த 2 பெரிய அசுர கட்சிகளை ஜெயிக்க வேண்டும் என்பது சாதாரண வி‌ஷயம் அல்ல.

மிகப்பெரிய ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா தற்போது இல்லை. தேர்தலில் கட்சிக்காக 30 சதவீதம் ஓட்டுப்போட்டார்கள். கருணாநிதிக்காக 70 சதவீதம் பேர் ஓட்டு போட்டார்கள்.

அதே போல் ஜெயலலிதாவுக்காக 70 சதவீதம் பேரும், கட்சிக்காக 30 சதவீதம் பேரும் ஓட்டு போட்டார்கள். அவர்கள் இப்போது இல்லாததால்தான் தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்தேன்.

அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி விட்டு திடீரென்று ஒதுங்கி விட்டால் மற்றவர்கள் பயம் காரணமாக ஒதுங்கி விட்டார் என்று கூறுவார்கள். அந்த கெட்ட பெயரை பெற விரும்பவில்லை.

54 ஆண்டு ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டிய கால கட்டம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு மக்கள், இளைஞர்களிடம் எழுச்சி உண்டாக வேண்டும்.

இந்த தமிழ் மண் புரட்சிக்கு வித்திட்டதாகும். காந்தி, விவேகானந்தர் இங்கிருந்துதான் புரட்சியை தொடங்கினார்கள். அது போன்று இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலையாக உருவாக வேண்டும். நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஒரு மாநில கட்சி 1967-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது.

அதுபோன்று 2020-ம் ஆண்டு ஒரு புரட்சி ஏற்படும். இந்த புரட்சி இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்.

அதிசயம் நிகழும் என்று முன்பு தெரிவித்தேன். அந்த அற்புதத்தை நிகழ்த்த மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

நான் முதல்வர் இல்லை என்று சொல்லி அதனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன். தமிழகத்தில் பண பலம், அரசியல் பலத்துக்கு எதிராக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன்.

எனது திட்டங்களையும் மக்கள், இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக நீங்கள் தகவல்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அந்த எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன்.

நான் வருங்கால முதல்வர் என்று சொல்வதை ரசிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரஜினி கூறினார்.


Share this News:

Leave a Reply