சென்னை (12 ஜன 2023):தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் “Feasibility Study”-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது.
பின்னர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன்சிங்கால் 2004ம் ஆண்டு ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி முன்னிலை வகிக்க இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் 2.7.2005 அன்று துவக்கி வைத்தார்கள். திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களை செழிக்க வைக்கும் இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும் வகையில் தற்போது “ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்” என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.
இப்படி மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது.
எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது என கூறி தனது உரையை நிறைவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதனை அடுத்து அவையின் ஒருமித்த ஆதரவை அடுத்து சேது சமுத்திர திட்டம் தொடர்பான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.