ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கையில், “விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
விளையாட்டுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தால் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை. ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 7 தமிழக வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பதில் பெருமகிழ்ச்சி.” என்றார்.
மேலும் “ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும். வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும், வெண்கல பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும்” என்று கூறினார்.