சென்னை (08 பிப் 2020): ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
இந்நிலையில் இந்த படம் போதுமான பணத்தை வசூலீட்டவில்லை என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இழப்பீட்டுக்காக அவர்கள் இயக்குனர் முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தபோது அவர் அனுமதிக்கவில்லை, அதேபோல ரஜினிகாந்தும் நேரில் பார்த்து பேச அனுமதிக்கவில்லை என்று விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான புகார் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், நடிகரும், இயக்குனருமான டி.ஆர்.ராஜேந்தரிடன் செல்ல, இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த டி.ஆர் ராஜேந்தர், விநியோகிஸ்தர்கள் மீது காவல்நிலையத்தில் முருகதாஸ் புகார் அளித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இயக்குனர் முருகதாஸ் தாமாக முன்வந்து வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என கேள்வி எழுப்பி நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார்.