சென்னை (11 மே 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, 7 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. நேற்று புதியதாக 669 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. புதியதாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 47 பேர் தமிழகத்தில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இன்று மட்டும் 135 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 1,959 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 7,204 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போது 5,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வழக்கம் போல சென்னையில்தான் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் கண்டறியப் பட்டுள்ளனர். 509 பேர் சென்னையில் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் கண்டறியப் பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகம் முழுவதும் 2,43,037 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. இன்று மட்டும் 13,367 பேருடைய மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.