சேலம் (08 மே 2020): சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் டோக்கன் பள்ளியில் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுவரை அமலில் இருக்கும் நிலையில், நேற்று முதல் சாராய வியாபாரம், டாஸ்மாக் அமோகமாக நடைபெற்று வருகிறது. மது பிரியர்கள் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குடிகாரர்களுக்கு, காவல்துறையினர் பாதுகாப்பில் டோக்கன் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தை மதுபான விற்பனைக்கு பயன்படுத்தியுள்ளது பெரும் வெட்கக் கேடான விசயம் என்று எதிர்கட்சியினர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மூன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று மதுபான கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மதுபிரியர்களுக்கு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு பள்ளிக்கூடத்தில் டோக்கன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.