சென்னை (15 ஜூன் 2020):அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய முஹம்மது சரீப் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிகப் பெரும் மன உளைச்சல்களுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று சென்னை வழியாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முஹம்மது சரீப் என்ற 61 வயது சகோதரர் மாம்பாக்கத்தில் விஜடி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவ உதவி கேட்டும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் காட்டிய அலட்சியப் போக்கினால் ரத்த வாந்தி எடுத்து சரீப் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலென்சு அனுப்புங்கள் என்று அங்குத் தனிமைப்படுத்தியிருந்தவர்கள் கோரிக்கை வைத்து அரசு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதே போல் இரண்டு தினங்களாக மருத்து உதவி கேட்பவர்களின் கோரிக்கைகளை அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தி வந்துள்ளது.
தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்துதல் முகாமில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் விஐடி முகாமில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் தாயகம் திரும்பிய தமிழர்கள் அனைவர்களுக்கும் பணிவிடை செய்து வந்தனர். ஆனால் கடந்த மூன்று தினங்களாகத் தன்னார்வ அமைப்புகளின் சேவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். இதன் காரணமாகக் கடந்த மூன்று தினங்களாக விஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ளவர்கள் மிகப் பெரும் பாதிப்பிற்கு இழக்காகியுள்ளனர்.
எமது அமைப்பின் சேவை தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால் நோயுற்றவர்களைத் துரிதமாக எமது ஆம்புலென்சு மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும்.
தானும் உதவாமல், உதவி செய்து வந்தவர்களையும் உதவிட விடாமல் அலட்சிய போக்குடன் நடந்து கொண்ட மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரத்த வாந்தி எடுத்து ஒரு உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த உயிர் இழப்பிற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.
இறந்த முஹம்மது சரீபின் குடும்பத்தினருக்கு ரூ10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு அளிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகின்றேன்.
இவ்வாறு ஜவாஹிருல்லா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.