புதுடெல்லி (21 மார்ச் 2020): கனிகா கபூர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது.
பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பிய பின், அவர் லக்னோ சென்றுள்ளார். லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை.இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பீதி ஏற்பட்டது.அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் முன்னெச்ரிக்கையாக தன்னை தானே தனிமைப் படுத்திக் கொள்ள முடிவெடுத்தார். இதுபோலவே அவரது மகன் துஷ்யந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்தார்.
இந்தநிலையில் வசுந்தரா ராஜேவுக்கு நடத்தப்பட்ட கரோனா தொற்று சோதனையில் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனை அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அதில் தெரிவித்துள்ளதாவது: கரோனா வைரஸ் சோதனை முடிவுகளின்படி எனக்கும் எனது மகனுக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் அடுத்த 15 நாட்களுக்கு நானும் எனது மகனும் முன்னெச்சரிக்கையாக எங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.