திருப்பூர் (02 பிப் 2020): திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் வள்ளியம்மாள் (31), இவரது கணவர் ராமசாமி (35). இந்த தம்பதிக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணமாகி குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வள்ளியம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது கண்வலிக்கிழங்கு விதையை அரைத்துக் குடித்து மயக்கமடைந்துள்ளார். அப்போது அங்கிருந்த ராமசாமி அவரை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வள்ளியம்மாள், சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மூலனூர் காவல்துறையினர் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், திருமணமாகி 13 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.