மணிலா (02 பிப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பாப் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகியுள்ளார்.
சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனாவில் இதுவரை இந்த நோயினால் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனினும் சீனாவை தவிர்த்து இந்த நோயினால் வெளியில் யாரும் உயிரிழக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சீனர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயினார்ல் உயிரிழந்துள்ளார்.
44 வயதான இவர் சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் நோயால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.