மியான்மர் (28 மார்ச் 2021): மியான்மரில் நேற்று ஒரே நாளில் 114 பேர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில் மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் 13 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இதுவரை ராணுவத்தின் ஈவு, இரக்கமற்ற நடவடிக்கைக்கு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணுவ ஆட்சியின் பாதுகாப்பு படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.