வாஷிங்டன் (22 ஜூன் 2020): வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் மேதையான ஜான் போல்டன் The Room Where it Happened” எனும் பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஜூன் 23- ஆம் தேதி இந்த புத்தகம் வெளியாக இருந்த நிலையில் நேற்று அந்த புத்தகத்திற்கு அமெரிக்க அரசு திடீரென தடை விதித்தது.
அரசின் முக்கிய பதவியில் இருந்தவர் எழுதிய புத்தகம் என்பதால் அதனை தணிக்கை செய்த பின்னரே வெளியிட முடியுமென காரணமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறு தேர்தலில் தான் வெற்றி பெற சீனாவின் அதிபர் ஜின்பிங்கின் உதவியை டிரம்ப் நாடியதாக புத்தகத்தில் ஜான் போல்டன் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையை எப்படி நடத்த வேண்டும் என்பது ட்ரம்புக்கு தெரியாது எனவும், வெளியுறவுக் கொள்கை குறித்து அவருக்கு புரிதல் இல்லை என்றும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது ஜின்பிங்கை சந்தித்த ட்ரம்ப் அமெரிக்காவிலிருந்து, சோயா பீன்ஸ் கோதுமை ஆகியவற்றை அதிக அளவில் சீனா இறக்குமதி செய்ய வலியுறுத்தியதாக போல்டனின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மறு தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என டிரம்ப் கூறியதாகவும் அதற்கு ஜின்பிங் இசைவு தெரிவித்ததாகவும் போல்டன் தனது The Room Where it Happened” புத்தகத்தில் கூறியுள்ளார்.
அரசியல் ஆதாயத்துக்காக அதிபர் பதவியை ட்ரம்ப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக உக்ரைனில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற்ற நிகழ்வு இருப்பதாக போல்டன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அணு ஆயுத வல்லமை பெற்ற நாடு என்ற தகவல் கூட ட்ரம்புக்கு தெரியாது என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்லாந்து ரஷ்யாவின் அங்கமா என ஜான் கெல்லியிடம் ட்ரம்ப் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீதே படையெடுக்க டிரம்ப் விரும்பியதாகவும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது ஜார்ஜ் புஷ்ஷின் முட்டாள்தனம் என அவர் விமர்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் தங்களுக்கான செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்ற ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும் இல்லையென்றால் சிறை தண்டனையை அனுபவிக்கக்கூடும் என ட்ரம்ப் மிரட்டியதாகவும் ஜான் போல்டன் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் மேதையான ஜான் போல்டனை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமித்தார். அதே ஆண்டு அப்பதவியிலிருந்து விலகினார் போல்டன். ஆனால் தனது கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லை என, போல்டனை பதவியிலிருந்து நீக்கியதாக ட்ரம்ப் கூறினார்.
The Room Where it Happened” புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், போல்டன் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளதாகவும், மிக ரகசியமாக வைக்கப்பட வேண்டிய தகவல்களை, ஒப்புதல் பெறாமலேயே எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-இளவேனில்