லண்டன் ஹரே கிருஷ்ணா இஸ்கான் ISKCON ஆலயத்தில் கடுமையான கொரோனா பாதிப்பு!

Share this News:

லண்டன் (07 ஏப் 2020): கொரோனா COVID-19 வைரஸால் இங்கிலாந்திலுள்ள ஹரே கிருஷ்ணா அமைப்பான இஸ்கான் (ISKCON) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலண்டனிலுள்ள அந்த கோயிலைச் சேர்ந்தவர்களுள் இருபத்தொன்று பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பக்தர்கள் மரணமடைந்துள்ளார்கள்.

இறந்தவர்களின் பெயர்கள் அவர்களது குடும்பத்தினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர்களுள் ஒருவர் பக்தி சாரு சுவாமியின் சீடரான, எழுபது வயதைக் கடந்த ராமேஸ்வர தாஸ் ஆவார். இங்கிலாந்தில் உள்ள பல கோயில்களுக்கு இவர் ஆலோசனை மற்றும் வழிகாட்டியுமாவார்.

மரணமடைந்த பக்தர்கள் போக, கொரோனா பரவியுள்ள பக்தர்கள் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களுள் முப்பது, நாற்பது வயதைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
மற்றொரு மூத்த பக்தரான தனஞ்சய தாஸ் இத்தாலி, ரோம் நகரங்களில் கோயிலைத் தொடங்கிவைத்தவர். அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 12 ஆம் தேதி ஒரு பக்தரின் இறுதிச் சடங்கில் சுமார் 1,000 பேர் கூடியிருந்தனர். அதனையடுத்து இங்கிலாந்தின் ஹரே கிருஷ்ணா பக்தர் சமூகத்தினரிடையே வைரஸ் பரவியிருக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.

“இந்த கிரகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எங்களது இதயங்கனிந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றோம். குறிப்பாக, இங்கிலாந்தில் உள்ள எங்கள் பக்தர் சமூகங்களில் உள்ளவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது வருத்தத்தையும், அனுதாபங்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று இங்கிலாந்திலுள்ள பிரகோசா தாஸ் கூறியுள்ளார்.

இதுவரை பாதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை குறித்து, இங்கிலாந்தில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் சமூக ஊடகங்களில் கூறியுள்ளனர்.

“பரிசோதிக்கப்பட்ட பக்தர்களில் 21 உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் மட்டுமே வந்துள்ளன. மேலும் பலருக்கு இந்நோய் பரவியிருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சனை என்னவென்றால், இன்னும் எத்தனை பேர் என்று எங்களுக்குத் தெரியாது,” என்று பிரகோசா மேலும் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply