தோஹா, கத்தார் (18 அக் 2025): பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர், நிறுத்தம் கண்டுள்ளது. தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு கத்தார் அரசு மற்றும் துருக்கி குடியரசு நடுவர்களாக இருந்தன.
கத்தார் நாட்டின் வெளிநாட்டு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
“அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பும் உடனடி போர் நிறுத்தம் செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் ஒப்புக் கொண்டுள்ளன.
அத்துடன், வரவிருக்கும் நாட்களில் இரு நாடுகளின் தரப்பினரும் தொடர்ந்து நட்பு ரீதியிலான சந்திப்புகளை நடத்தவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் போர்நிறுத்தம் முழுமையாக பின்பற்றப்படும். இத்தகைய பரஸ்பர கலந்துரையாடல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளிலும் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு உதவும்.
கத்தாரில் நடைபெற்ற இந்த முக்கியமான பேச்சுவார்த்தை, இரு சகோதர நாடுகளுக்குமிடையிலான எல்லைப் பதற்றங்களை முடிவுக்கு கொண்டுவரவும், அந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கான உறுதியான அடித்தளத்தை அமைக்கவும் உதவும்”
இவ்வாறு கத்தார் அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
- இந்நேரம்.காம்