தஞ்சையில் குவியும் பக்தர்கள் – பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

Share this News:

தஞ்சாவூர் (04 பிப் 2020): தஞ்சை பெரிய கோவிலில் நாளை 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேக விழா, 23 ஆண்டுகளுக்கு பின், நாளை நடைபெறுகிறது. யாகசாலை பூஜையை காண, 1ம் தேதி முதல், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கும்பாபிஷேக விழாவை காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வர துவங்கிஉள்ளதால், தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுஉள்ளது.

நாளை அதிகாலை, 4:30 மணிக்கு, எட்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸ்ஹூதி ஆகியவை நடைபெறவுள்ளது. காலை, 7:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7:25 மணிக்கு, திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம்; 10:00 மணிக்கு, பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேலவீதி, வடக்குவீதி ஆகிய இடங்களில், மூன்று திருமண மண்டபங்களில் காலை, மாலை சிற்றுண்டியும், மதியம் உணவும் வழங்கப்படுகிறது. அதே போல், சீனிவாசபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிவாச்சாரியார்களுக்கும், மேலவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஓதுவார்களுக்கும் தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது.

இந்த உணவு மாதிரிகளை, உடனுக்குடன் சோதனை செய்ய, 22 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை நகரில், 11 இடங்களில், பக்தர்கள் இளைப்பாறும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மோர், பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கப்பட உள்ளது. பெரிய கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், தஞ்சை, எஸ்.பி., அலுவலகத்தில், தமிழக டி.ஜி.பி., திரிபாதி தலைமையில், நேற்று மாலை நடந்தது.

இதில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பிக்கள்., டி.எஸ்.பி.,க் கள் பங்கேற்றனர். பின், பஸ் நிலையங்கள், ரயிலடி, திலகர்திடல் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட, டி.ஜி.பி., திரிபாதி, தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *