இப்போது நான் சொல்லப் போவது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல. முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. இதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கற்பனை என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
இதில் வரும் கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இல்லை என்று மறுப்பதற்கில்லை. இருந்தாலும் ‘கதை’ என்ற சொல்லுக்கு ஒரு கவர்ச்சி உண்டு என்பதால் நானும் இதை ‘கதை’ என்றே சொல்லப் போகிறேன். நீங்களும் அவ்வப்போது ‘ம்..’ போட மறந்து விடாதீர்கள்.
இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் அய்யாவு. அவன் நல்லவனா, கெட்டவனா என்பதை நான் சொல்வதை விட கதையை படிக்கும் நீங்களே முடிவு செய்து கொள்வதுதான் சிறந்தது.
‘முன்னொரு காலத்தில்..’
கதைகளெல்லாம் ‘முன்னொரு காலத்தில்..’ என்று தொடங்குவதுதானே வழக்கம்? இந்தக் கதை தொடங்கியது ரொம்பவும் முன்னே. கி.மு.வுக்கெல்லாம் முந்தைய காலத்தில் தொடங்கியது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இது ஒரு அதிசயமான கதை. அந்தக் காலத்தில் தொடங்கிய இது இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்தக்கதை தொடங்கிய காலத்தில் மக்கள் பண்டமாற்று முறையில்தான் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தனர். பண்ட மாற்று என்றால் தெரியும்தானே? ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்களே தயாரித்துக் கொள்வர். உழவு, தையல், தச்சு, குயவர், பொற்கொல்லர் இன்னபிற தொழில்களில் ஈடுபட்டு அந்த உற்பத்தியில் தங்கள் தேவைக்குப்போக மீதமானவற்றை மற்றவர்களிடம் கொடுத்து பண்டமாற்று செய்து கொள்வர்.
மாதமொருமுறை குறிப்பிட்ட இடத்தில் சந்தை கூடும்போது அந்த இடம் மிக புழுதி நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் மிகுதியான பொருட்களை கூவிக்கூவி விளம்பரப் படுத்திக் கொண்டு, தங்களுக்குத் தேவையான மாற்றுப் பொருள் எதுவும் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே இருப்பார்கள். சப்தமாக பேரம் பேசுவதும் வாக்குவாதம் செய்வதுமாக அந்த இடமே ஒரே இரைச்சலாக இருக்கும். ‘சந்தை’யென்றாலே அப்படித்தானே?
ஆனால், மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சொல்லப்போனால், மாதமொருமுறை வரும் அந்த சந்தை நாளை அவர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தனர் என்றே சொல்லலாம். தங்கள் பொருட்களை பரிமாறிக் கொள்வதுடன் உறவினர்களை, நண்பர்களை ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளும் வசதியும் இருந்தது. ஆனால் யாருடனும் சாவகாசமாக நின்று பேசவோ அளவளாவவோ அவகாசம் கிடையாது. சந்தை நேரம் முடியுமுன் தங்கள் விற்பனையையும் கொள்முதலையும் செய்து முடிக்க வேண்டுமே!
இந்தக்கால பஞ்சாயத்துகளைப் போலவே, அந்தக் காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நிர்வாக சபை இருந்தது. ஊர் மக்கள் ஒன்றுகூடி நிர்வாக சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். தலைவரின் பேச்சுக்கு ஊர் மக்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். அந்தந்த ஊர் மக்களின் தனிமனித சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பது, யாரும் யாருக்கும் அநியாயம் செய்யாமல் பார்த்துக் கொள்வது, அவர்களிடையே எழும் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளை வழங்குவது, இவையே நிர்வாக சபை தலைவரின் பொறுப்புகளாக இருந்தன.மரத்தடி, ஜமுக்காளம், சொம்பு இதெல்லாம் அப்போதே இருந்ததா என்பது தெரியவில்லை.
பிரச்னைகள் அதிகம் எழுவது சந்தை நாளில்தான். அப்போது நிகழும் பேரங்களும் வாக்கு வாதங்களும் அவற்றின் மூலம் எழும் பிரச்னைகளும் தலைவருக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. மக்களின் இந்த பிரச்னைகளுக்கு எப்படி சுமுகமான தீர்வு வழங்குவது என்பது அவருக்குப் புரியவில்லை. ஒரு கத்திக்கு இரண்டு கூடை சோளம் சமமாகுமா? ஒரு காளை மாட்டுக்குப் பகரமாக ஒரு தள்ளு வண்டி கொடுத்தால் போதுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு எப்படி விடை காண்பது? இப்படி பிரச்னைகள் நிரம்பிய பண்டமாற்று முறைக்கு மாற்று வழி எதுவும் கிடையாதா?
இந்த இடத்தில்தான் நம்ம கதாநாயகன் என்ட்ரி ஆகிறான்.
-தொடரும்
– சலாஹுத்தீன் பஷீர்