நம்ம கதாநாயகனின் பெயர் அய்யாவு. தொழில் பொற்கொல்லன். சந்தைக் கூடும் மைதானத்தில் ஒரு ஓரத்தில்தான் அவனது தொழிற்சாலை இருந்தது.
அவனது வாடிக்கையாளர்கள் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கூலிக்குப் பகரமாக அரிசி, பருப்பு, செருப்பு என்று எதையாவது கொண்டு வந்துக் கொடுப்பார்கள். அய்யாவுக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் அவன் இருக்குமிடத்திலேயே கிடைத்து விடுவதால் அவன் சந்தைக்குச் சென்று கூவ வேண்டிய தேவை ஏற்படாது. இருந்தாலும் அவ்வப்போது யாராவது அவனுடைய தொழிற்சாலைக்குள் தலையை நீட்டி, “என்னாண்ட ஆட்டுக்குட்டி கீது.. உன்னாண்ட அடுப்பு கீதா?” என்று எதையாவது கேட்டு எரிச்சலூட்டுவார்கள்.
அய்யாவுவிடம் நிறைய தங்கமும் வெள்ளியும் இருந்தது. ஆனால் அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? அப்போது அதன் பயன்பாடு மிகக் குறைவு. எப்போதாவது யாராவது கால் பவுன் மூக்குத்தி, அரை பவுன் தோடு என்று ஆர்டர் கொடுத்தால்தான் அய்யாவுக்கு வியாபாரம் நடக்கும். அதற்குக்கூட கூலியாக அரிசி, பருப்பு, செருப்பு என்று எதையாவது கொடுத்து விட்டு போவார்கள். இந்த வாழ்க்கை அய்யாவுக்கு அலுத்து விட்டது.
விரைவிலேயே சமூகத்தில் பெரும் செல்வாக்கு மிக்கவனாக ஆக வேண்டும் என்பது அவனுடைய கனவு. பொன்னையும் வெள்ளியையும் உருக்கி ஆபரணங்கள் செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் தனது கனவை நனவாக்கும் வழிமுறைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. இவ்வாறு பல நாட்களாக யோசித்ததன் பலனாக அவனுக்கு ஒரு திட்டம் தோன்றியது. அதை தட்டி, வெட்டி, சரி பண்ணி ஒரு ‘மாஸ்டர் பிளானை’ உருவாக்கினான் அவன். அதைச் செயல்படுத்தும் வாய்ப்பும் அவனை நெருங்கி வந்தது.
பண்ட மாற்று முறையினால் மக்களிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பது நகரசபைத் தலைவருக்கு பெரும் தலைவலியாக இருப்பதை முன்பே பார்த்தோம். அய்யாவுக்கு இந்தப் பிரச்னை மிக நன்றாகவே தெரியும். பெரும்பாலான பஞ்சாயத்துகள் அவனுடைய தொழிற்சாலைக்கு எதிரிலேயே நடக்கும். “ஏம்ப்பா அய்யாவு… சும்மா வேடிக்கை பார்த்துட்டிருக்கியே.. ஏதாவது யோசனை இருந்தா சொல்லுப்பா!” என்று தலைவர் அவ்வப்போது அவனையும் வம்பில் இழுத்து விடுவார்.
ஒருநாள் தலைவரைச் சந்தித்து அய்யாவு சொன்னான்: “ஐயா! இந்த பண்ட மாற்று முறையின் பிரச்னைகளுக்கு என்னிடம் ஒரு அருமையான தீர்வு இருக்கிறது. ஆனால் நம் ஊர் மக்கள் அனைவருமே இதற்கு ஒப்புக்கொண்டு ஒத்துழைத்தால் மட்டுமே அதைச் செயல்படுத்த முடியும். உங்களுக்கு ஓக்கே என்றால் நானே மக்களிடம் அந்தத் திட்டத்தை விளக்கிச் சொல்வேன். அடுத்த வாரம் மக்கள் அனைவரும் ஊர் பொது மைதானத்தில் வந்து கூடுவதற்கு அனுமதி தாருங்கள்.”
தலைவருக்கு இதில் ஆட்சேபணை இருக்கவில்லை. ‘என்ன சொல்றான்னுதான் கேப்போமே’. தண்டோரா போட்டு ஊர் மக்களிடம் தெரிவிக்க அவரே ஏற்பாடு செய்து விட்டார்.
தொடரும்
– சலாஹுத்தீன் பஷீர்