வெகு நாட்களுக்குப் பிறகு சேது சபைக்கு வந்திருந்தார்.
“இவ்வளவு நாள் ஆப்சென்ட் ஆன இவரை என்ன பண்ணலாம்?” என்று ஆரம்பித்து வைத்தார் பிரகாசம்.
“பெஞ்சு மேல ஏத்திடுவோமா?” – அருள்
“தோப்புக்கரணம்?” – நல்லையா
“அபராதம் விதிச்சிடுவோம்” என்றார் ஜி.
“இது என்னய்யா அநியாயமாக இருக்கிறது? இதுவரை விளக்கிய பாடங்களை எல்லாம் நீங்கள் நன்றாக உள்வாங்கிக் கொள்வதற்காகத்தான் இந்தச் சிறிய இடைவெளி. “ என்றார் சேது கண்சிமிட்டலுடன்.
“என்னது? சிறிய இடைவெளியா? இந்த சமாளிஃபிகேசனெல்லாம் வேண்டாம். முதல்ல 1,000 ரூபாயை எடுத்து வையுங்க அபராதமா!” என்றார் ஜி கறாராக.
பர்ஸைத் திறந்து 1000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்த சேது அதை யாரிடமும் கொடுக்கவில்லை. அதை விரித்து எல்லோருடைய பார்வையிலும் படும்படி காட்டினார். “இதுல ‘I promise to pay the bearer the sum of one thousand rupees’ அப்டின்னு இந்தியிலும் ஆங்கிலத்திலும் அச்சிட்டு மத்திய வங்கி கவர்னர் கையெழுத்து போட்டிருக்கிறார் தெரிகிறதா? இதற்கு என்ன பொருள்?”
“அதாவது, ஆயிரம் ரூபாயை கவர்னர் கையில கொடுத்தா அதுக்குப் பதிலா அவர் ஆயிரம் ரூபாய்க்கு நிகரான எதையோ தர்றதா சொல்றாரு”
“அது எது? இதற்கான பதிலை பார்க்குமுன் அய்யாவு கதையில் ஒரு ஃப்ளாஷ்பேக் பார்த்துடுவோம்”
“எட்டாம் அத்தியாயத்தில் அய்யாவு சொன்னது நினைவிருக்கிறதா?
‘மதிப்பு வாய்ந்தபொற்காசுகளை பாதுகாப்பது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் என்னிடம் வாருங்கள். என்னிடமிருக்கும் இரும்புப் பெட்டகத்தினுள் உங்கள் நாணயங்களை வைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது வந்து அதை எடுத்துச் செல்லுங்கள். எனது இந்தச் சேவைக்காக ஒரு சொற்பமான சேவைக் கட்டணம் செலுத்தினால் போதும்’.
“அவ்வாறு பொற்காசுகளை தம்மிடம் கொண்டு வந்து தருபவர்களிடம் ‘இன்னாருடைய இவ்வளவு பணம் என்னிடம் இருக்கிறது’ என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கையெழுத்து போட்டு (அல்லது கைநாட்டு வைத்து) கொடுத்துக் கொண்டிருந்தான் அய்யாவு.
“வியாபாரிகள் கொள்முதலுக்குச் செல்லும்போது அய்யாவுவிடம் வந்து நாணயங்களை எடுத்துச் செல்வதும் விற்பனையில் கிடைக்கும் நாணயங்களை மீண்டும் வந்து அவனிடம் ஒப்படைப்பதும் வாடிக்கையானது.
“பிறகு இந்த நடைமுறையை மேலும் எளிதாக்குவதற்காக, நாணயங்களை தூக்கிக் கொண்டு அலைவதற்குப் பதிலாக தன்னுடைய துண்டுச் சீட்டையே கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அய்யாவு பரிந்துரைத்தான்.
“மக்களுக்கு இதுவும் பிடித்திருந்தது. கடைக்காரர்களுக்கும் இந்த நடைமுறை எளிதாக இருந்தது. அய்யாவுவின் கையெழுத்து உள்ள சீட்டுகளை எப்போது வேண்டுமானாலும் அவனிடம் கொடுத்து நாணயங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தம் கொள்முதலுக்காக அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். வியாபாரப் பரிவர்த்தனைகளுக்காக தங்க நாணயங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக துண்டுச் சீட்டுகளையே மக்கள் பயன்படுத்தும் நிலைஉருவானது.
“அய்யாவுவின் இந்தத் துண்டுச் சீட்டுதான் அக்காலத்தில் ‘வாக்குறுதி பத்திரம்’ (Promisory Note) என அழைக்கப்பட்டது. இன்றைய கரன்சி நோட்டுகளின் ஆதி வடிவம் அது. ‘இந்தச் சீட்டைக் கொண்டுவந்து தருபவர் வசம் இச்சீட்டின் மதிப்பிற்கு நிகரான தங்கத்தை வழங்குவேன்’ என அன்றைக்கு அய்யாவு போன்ற பொற்கொல்லர்கள் வழங்கிய வாக்குறுதியைத்தான் இன்றைக்கும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கரன்சி நோட்டில் கையெழுத்துப் போட்டு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எல்லா நாட்டு மத்திய வங்கிகளும் இந்த நடைமுறையை இன்று பின்பற்றுவதில்லை. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் இந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.
“குறிப்பாக ஏன் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்?” என்றார் வெற்றி.
“காரணம் இருக்கிறது” என்றார் சேது.
தொடரும்
– சலாஹுத்தீன் பஷீர்